தோகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
6/13/2017 4:11:34 PM
மீனம்பாக்கம்: தோகாவில் இருந்து சென்னைக்கு ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த கடப்பாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தோகாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஸ்ரீராமுலு (45) என்பவர், சுற்றுலா பயணிகள் விசாவில் கத்தார் சென்று விட்டு சென்னை திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தனர். அதற்குள் எமெர்ஜென்சி விளக்கு இருந்தது.
அதை சோதனையிட்டனர். அடிபாகத்தில் கருப்பு அட்டை பெட்டி இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, 10 தங்க பிஸ்கெட் இருந்தது. ஒவ்வொன்றும் 100 கிராம். மொத்தம் 1 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம். இதையடுத்து அதிகாரிகள், ஸ்ரீராமுலுவை கைது செய்து, தங்க பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, பலமுறை துபாய், அபுதாபி, சிங்கப்பூர், இலங்கைக்கு சென்று வந்துள்ளார். அதனால் இதுபோன்று கடத்தி சென்றாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.