மில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
6/12/2025 5:28:58 PM
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அம்பிகை நகர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் பாபு(39). அவினாசி அருகே உள்ள நம்பியாம்பாளையத்தில் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பாபு நூல் மில்லுக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் அவரது மனைவி ஹேமாவதி(30), தாயார் ஜெயபாரதி(60), மகள் தருணா(12) ஆகியோர் இருந்தனர். நள்ளிரவில் வீட்டு பால்கனி மூலம் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கீழ் பகுதியில் உள்ள அறைக்குள் சென்று பீரோவை திறந்து நகையை கொள்ளையடித்தனர். அடுத்த அறையில் மனைவி, மகள் மற்றும் தாயார் தூங்கிக்கொண்டிருந்த கட்டிலின் கீழ் பொருத்தப்பட்டிருந்த டிராயரை திறந்து கைப்பையில் இருந்த நகையை திருடிக்கொண்டு தப்பிவிட்டனர். மொத்தம் 40 பவுன் நகை கொள்ளை போனது.
அதிகாலையில் எழுந்த பாபுவின் தாயார் நகைகள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை நடந்த வீட்டைச்சுற்றிலும் நெருக்கமாக வீடுகள் உள்ள நிலையில், நகை வைக்கப்பட்டு இருந்த பீரோ எப்பொழுதுமே பூட்டப்படாமல் இருப்பதும், கட்டிலின் கீழ் பொருத்தப்பட்ட டிராயரில் நகை இருப்பது தெரிந்த நபர்கள் மட்டும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.