மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: முதல்வர் சவுகான் உண்ணாவிரதம்
6/10/2025 6:01:40 PM
போபால்: மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக அமைதி திரும்ப வலியுறுத்தி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று முதல் கால வரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். மத்திய பிரதேசத்தில் விவசாய கடன் ரத்து கோரி மன்சார் மாவட்டத்தில் கடந்த செவ்வாய் அன்று நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து விவசாயிகளின் போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சூழலில் மாநிலத்தில் அமைதி திரும்பவும், விவசாயிகள் பேச்சு வார்த்தைக்கு முன்வர வலியுறுத்தியும் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கால வரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். போபாலில் உள்ள தசரா மைதானத்தில் உண்ணாவிரதத்தை இன்று காலை 11 மணிக்கு தொடங்கினார். இதற்கு பாஜவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று நிருபர்களை சந்தித்த முதல்வர் சவுகான் கூறுகையில், விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளேன். இன்று நேரில் சந்தித்து என்னிடம் குறைகளை கூறலாம். மாநிலத்தில் அமைதி திரும்பும் வரை கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்த முடிவு செய்துள்ளேன் என்றார். மேலும் தனது டுவிட்டரில், மாநிலத்தின் அமைதிக்காக போபாலில் உள்ள தசரா மைதானத்தில் உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சிகள் தாக்கு
ஆனால் முதல்வர் சவுகானின் இந்த நடவடிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்எல்ஏ அஜஸ் சிங் கூறுகையில், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக கோடிக்கணக்கில் செலவழித்து முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார் என்று தாக்கினார். சிபிஎம் தலைவர் பாதல் சரோஜ் கூறுகையில், இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் வேலை. முதல்வரின் இந்த செயல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் வேலையாகும் என்றார்.