தம்பதி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்
6/8/2025 3:36:53 PM
தென்காசி: கணவன், மனைவியை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், சகோதரி 6 பேர் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே கண்ணாடிகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ். பால் வியாபாரியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பால் வியாபாரியான சுப்பிரமணியன் என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியன் கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சுப்பிரமணியனின் கொலைக்கு தொழில் போட்டியாளரான செல்வராஜ் தான் காரணம் என்று சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரர்கள் கருதினர்.
இதற்கிடையே 2011ம் ஆண்டு மே 19ம் தேதி செல்வராஜ், அவரது மனைவி தங்கமணி ஆகியோரை வேனில் வந்த கும்பல் ஒன்று கொலை செய்தது. இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள், மாரியம்மாளின் சகோதரர்களான கண்ணாடிகுளத்தை சேர்ந்த மாடசாமி மகன்கள் வெள்ளத்துரை(30), குமார்(33), உடையார்(28), சுப்பிரமணியன்(24), சேகர்(20) மற்றும் சக்திவேல் மகன் மாடசாமி(32), பாளையங்கோட்டையைச் சேர்ந்த டிக்ராஸ் மகன் இளங்கோ(32), கண்ணாடி குளத்தை சேர்ந்த காசி மகன் மணிகண்டன்(30), ஆறுமுகவேல் மகன் நடராஜன்(20) ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரன் வழக்கில் தொடர்புடைய 10 பேருக்கும் இரண்டு கொலைகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.