பஸ்சில் பாலியல் பலாத்காரம் 2 டிரைவர்கள், கண்டக்டருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு: சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம்
6/8/2025 3:33:48 PM
சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓமலூர் பக்கமுள்ள நாரணம்பாளையம் வரை தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த வண்டியின் டிரைவர் மணிவண்ணன் (33), மாற்று டிரைவர் முருகன் (35), கண்டக்டர் பெருமாள் (22). இவர்கள் மூவரும் சேர்ந்து, அந்த பஸ்சில் பயணம் செய்த 15 வயது சிறுமியை கடந்த திங்கள்கிழமை இரவு பஸ்சில் வைத்தே பலாத்காரம் செய்தனர். சிறுமி, கதறி அழுதுகொண்டு பஸ்சில் இருந்து இறங்கி வந்ததைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேரையும் பிடித்து ஓமலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து டிரைவர்கள் மணிவண்ணன், முருகன், கண்டக்டர் பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கூட்டு பலாத்காரம், போக்ஸோ, கடத்தல், தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் அந்த சிறுமியை, கண்டக்டர் பெருமாளுக்கு அறிமுகம் செய்து வைத்த வீராணத்தை சேர்ந்த விஜய் (22) என்ற பஸ் கண்டக்டரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரையும் நேற்று சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 21ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மணிவண்ணன், பெருமாள், முருகன் ஆகியோருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பலாத்கார குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதால் அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் தானா? என்பதை கண்டுபிடிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதற்காக சேலம் மகளிர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். நீதிமன்ற அனுமதி பெற்றவுடன் அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடக்கும்.
அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து விட்டது. தற்போது காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் மூலமாக அச்சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று சேலம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கின்றனர். அதன்பிறகு அச்சிறுமியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை விரைந்து முடிக்க சேலம் எஸ்.பி. ராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். பஸ்சின் இருக்கையில் சில பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் ஆதாரங்களை தடயவியல் நிபுணர் வடிவேல், ஆய்வு செய்து வருகிறார். அதேபோல பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரின் ஆடைகள் சேரிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆதாரங்கள் இருக்கிறது. இதற்கான ஆய்வு சான்றிதழ் கிடைத்தவுடன், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்றனர்.