திருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்: 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து
6/7/2025 4:02:31 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று தொடங்கியது. இது, 3 நாட்கள் நடைபெற உள்ளதால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிமாத வளர்பிறை திரியோதசியன்று ஜேஷ்டாபிஷேகம் தொடங்கப்பட்டு, பவுர்ணமியன்று நிறைவு பெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஜேஷ்டாபிஷேகம் இன்று முதல் 9ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கிறது.ஜேஷ்டம் என்றால் முதன்மை என்பது அர்த்தம். அனைத்து அபிஷேகங்களுக்கும் முதன்மையாக விளங்குவது என்பதால் ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. ஜேஷ்டாபிஷேகம் செய்வதன் நோக்கம், பழமையான உற்சவமூர்த்திகளான மலையப்ப சுவாமி, தேவி பூதேவி சிலைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக செய்யப்படுகிறது.
இதையொட்டி இன்று உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் அகற்றப்பட்டு, கோயிலில் உள்ள சம்பங்கி மண்டபத்தில் பால், தேன், தயிர், இளநீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் புனுகு தைலம், பச்சை கற்பூரம் உட்பட பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய கலவை கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் வைர கற்கள் பொருந்திய கவசம் அணிவிக்கப்பட்டு, உற்சவ மூர்த்திகள் நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
2வது நாளான நாளை முத்து கவசம் அணிந்தும், 3ம் நாள் தங்க கவசம் அணிந்தும் நான்கு மாட வீதியில் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர். நிறைவு நாளில் உற்சவமூர்த்திக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் அடுத்த ஆண்டு நடக்கும் ஜேஷ்டாபிஷேகத்தின்போது தான் அகற்றப்படும்.இதையொட்டி கோயிலில் தினந்தோறும் நடக்கும் கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உட்பட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.