1000 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கு சிபிஐ கோர்ட்டில் லாலு பிரசாத் ஆஜர்
6/7/2025 3:59:27 PM
பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த 90 களில் நடைபெற்ற ரூ. 1000 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் நேற்று பாட்னா சிபிஐ கோர்ட்டில் நேரில் ஆஜரானார். பீகார் மாநிலத்தில் கடந்த 95ம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் முதல்வராக இருந்தார். அப்போது மாநிலம் முழுவதும் கால்நடை துறையின் கீழ் வரும் கால்நடை பராமரிப்பு மையங்களில் மாடுகளுக்கு தீவனம் வாங்கியதாக பொய்கணக்கு காட்டி சுமார் ரூ. 1000 கோடி வரை ஊழல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த 96ம் ஆண்டு லாலு உட்பட 44 பேர் மீது சிபிஐ பல்ேவறு வழக்குகள் தொடர்ந்தது. லாலு பிரசாத் யாதவ் மீது மட்டும் சுமார் 5 வழக்குகள் போடப்பட்டன. அந்த காலகட்டத்தில் பீகார் மாநிலமும் ஜார்கண்ட் மாநிலமும் ஒன்றாக இருந்தது. பின்னர் ஜார்கண்ட் தனியாக பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் நடைபெற்ற ஊழல்கள் அங்குள்ள ராஞ்சி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. இதில் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சில காலம் சிறையில் இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியில் இருக்கிறார். மாட்டு தீவன வழக்கில் மேலும் 4 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவைகள் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஒரே குற்றச்சாட்டுக்கு பல்ேவறு வழக்குகள் தொடரப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என லாலு பிரசாத் யாதவ் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இதர 4 வழக்குகளுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின்னர் எஞ்சிய 4 வழக்கு விசாரணையையும் லாலு சந்திக்க வேண்டும் என கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது லாலுவுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாட்டு தீவன ஊழல் வழக்கு நேற்று பாட்னா சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் நேரில் ஆஜரானார். பின்னர் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.