மதுக்கடையை மூட வலியுறுத்தி குடிமகன்களை அடித்து விரட்டும் போராட்டம்: பாவூர்சத்திரம் அருகே பரபரப்பு நாடகம்
6/7/2025 3:41:16 PM
பாவூர்சத்திரம்: டாஸ்மாக் கடையை மூடக்கோரி 6வது நாளாக நடந்த போராட்டத்தில் குடிமகன்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்று பெண்கள் நாடகம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திப்பணம்பட்டியில் இருந்து ஆவுடையானூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையை நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி, திப்.மீனாட்சிபுரம், கொண்டலூர், பூவனூர், ஆரியங்காவூர், நாட்டார்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுக்கடைக்கு அருகில் பந்தல் அமைத்து, சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். தினமும் பல்வேறு விதமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 3வது நாளில் சடலம் மாதிரிக்கு பாடை கட்டியும், மதுக்கடை முன்பு கொள்ளிகுடம் உடைத்தும், 4வது நாளில் ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் நடத்தியும், நேற்று முன்தினம் 5வது நாளில் தூக்கு மாட்டியும் பெண்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நேற்று 6வது நாள் போராட்டத்தில் மதுவுக்கு எதிராக நாடகம் நடத்தப்பட்டது. இதில் ‘வீட்டில் ஒரு பெண் குழந்தை பாடம் படித்துக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கு குடிபோதையில் வரும் தந்தை, அந்த குழந்தையிடம் குடிக்க பணம் வேண்டும். அம்மா பணம் வைத்திருக்கும் இடம் உனக்கு தெரியும். பணம் எடுத்து வா... என்கிறார். அதற்கு அந்த பெண் குழந்தை பணம் இல்லை என கூறுகிறது. இதனால் தகராறில் ஈடுபட, தனது தந்தையை குழந்தையே அடிப்பது போன்று நாடகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.அடுத்ததாக, ‘வெளியூரை சேர்ந்த சிலர் இங்குள்ள மதுக்கடை முன்பு மது குடிக்கின்றனர். அவர்கள் போதையில் அவதூறாக பேசிக் கொள்கின்றனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பெண்கள் வெகுண்டெழுந்து அவர்களை சரமாரியாக தாக்குவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றது.மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராம மக்களே வித்தியாசமான நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம மக்களின் நூதன போராட்டம் குறித்து அறிந்தும், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.