விமானத்தில் போதைப்பொருள் மதுரையில் சென்னை பயணி கைது
6/7/2025 3:38:18 PM
மதுரை: மலேசியா செல்லும் தனியார் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வந்தவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.கொழும்பு வழியாக மலேசியா செல்லும் தனியார் விமானம் நேற்று மாலை மதுரை வந்தது. இந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், விமானத்தில் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
இதில், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷேக் (43) என்பவர், வெள்ளை நிறத்திலான 5 கிலோ எடையுள்ள போதைப்பொருளை டிபன் பாக்ஸ்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 5 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால், மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.