ராணுவத்தினர் அதிரடி: நாகாலாந்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
6/7/2025 3:12:02 PM
கோஹிமா: நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருதரப்பினர் இடையே நடந்த சண்டையில் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், அரசுக்கு எதிராக பிரிவினை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக அரசுடன் மோதல்போக்கை கடை பிடிக்கும் இக்குழுக்கள், அவ்வப்பொழுது நாசவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், நாகாலாந்தின் மோன் பகுதியில், தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷியலிஸ்ட் கவுன்சிலை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வீரர்கள் நேற்று இரவு தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். இருதரப்பினர் இடையே கடும் சண்டை நடந்தது. இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பொதுமக்களில் ஒருவரும் பலியானார். தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால், வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.