6 மாதங்கள் முடிந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் சூழல் ஏற்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்
6/7/2025 3:04:30 PM
புதுடெல்லி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, நிர்ணயிக்கப்பட்ட 6 மாத காலம் நிறைவடைந்தும் தேர்தலை நடத்த முடியவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி காலியானது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, இடைத்தேர்தலை 6 மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆளுங்கட்சியான அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இரு அணிகளும் தனித்தனி சின்னங்களுடன் போட்டியிட்டன. இரு அணியினரும் தீவிர பிரசாரம் செய்தனர். இதற்கிடையே, தொகுதி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகளவில் நடந்தது. மேலும் பரிசுப் பொருட்கள், டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின.
இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. உகந்த சூழல் ஏற்படும்போது, ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய 6 மாத கால நிர்ணயம் கடந்த 4ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதுவரை அங்கு தேர்தல் நடத்தாதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஆர்.கே.நகரில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த முடியாத சூழல் இருந்ததால் தான் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, நிர்ணயிக்கப்பட்ட 6 மாத காலம் நிறைவடைந்துள்ள போதிலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்துவதற்கான சூழலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்துள்ள அறிக்கையின்படி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த மாதம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று, கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான கால சூழல் ஏற்படும் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.