மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர் கைது
6/6/2025 4:03:05 PM
திருவேங்கடம்: நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகே கே.ஆலங்குளத்தைச் சேர்ந்த விவசாயி சமுத்திரக்கனி (60). இவரது மனைவி கலிங்கி (58). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சமுத்திரக்கனிக்கு ஊருக்கு தெற்கே ேதாட்டம் உள்ளது. அங்கு கணவன், மனைவி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமுத்திரக்கனிக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த கலிங்கி, கணவரை கண்டித்து தகராறில் ஈடுபட்டார். ஆனால் சமுத்திரக்கனி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று கலிங்கிக்கும், சமுத்திரக்கனிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் கலிங்கி, விவசாய நிலத்திற்கு சென்று விட்டார். இதனிடையே மதியம் விவசாய மோட்டார் அறையில் கலிங்கி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என சமுத்திரக்கனி போலீசுக்கும், ஊரில் உள்ள உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அவரது உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சமுத்திரக்கனியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளத்தொடர்பு காரணமாக கலிங்கிக்கும், சமுத்திரக்கனிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது தெரிந்தது. நேற்று காலை நடந்த தகராறில் ஆத்திரமடைந்த சமுத்திரக்கனி, கலிங்கியை பின் தொடர்ந்து சென்று, அவரை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சேலையை கழுத்தில் கட்டி மோட்டார் அறையில் தூக்கில் தொங்க விட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.