கள்ளத் தொடர்பு விவகாரம் மைத்துனி அடித்து கொலை: தங்கை கணவருக்கு வலைவீச்சு
6/6/2025 3:53:48 PM
திருவொற்றியூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜார்ஜ்கென்னடி (45). இவரது மனைவி தேவி (40). கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கென்னடி சென்றுள்ளார். இதன்பிறகு அவர் இலங்கை அகதி முகாமுக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த தேவி, மாதவரம் வந்து விசாரித்துள்ளார். மாதவரம் உயர்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த சுஜி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. கணவனை வீட்டுக்கு வரும்படி அழைத்தபோது மறுத்ததால் தேவி முகாமுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், தஞ்சாவூர் மாலடி பேட்டையை சேர்ந்த தேவியின் அக்கா ரஞ்சனி வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் தனது கணவரின் கள்ளத்தொடர்பு பற்றி தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து அக்காவும் தங்கையும் மாதவரம் சென்று அங்கிருந்த ஜார்ஜ்கென்னடியிடம் கள்ளத்தொடர்பை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜார்ஜ்கென்னடி, மனைவி, அவரது அக்காவை சரமாரியாக தாக்கிவிட்டு கழுத்தை பிடித்து நெரித்து தள்ளிவிட்டுள்ளார். இருவரும் சாலையோரத்தில் கொட்டி வைத்திருந்த கருங்கற்கள் மீது விழுந்து காயம் அடைந்தனர். ரஞ்சனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தேவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்து பயந்துபோன ஜார்ஜ்கென்னடி அங்கிருந்து ஓடிவிட்டார். ரஞ்சனியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ரஞ்சனி பரிதாபமாக இறந்தார்.