தந்தை, மகளை கார் ஏற்றி கொல்ல முயற்சி: ஈரோட்டில் 3 பேர் கைது
6/6/2025 3:49:48 PM
ஈரோடு: ஈரோடு பெரியார்நகர் ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (61). இவரது மகள் மதுமதி (33). இவர் இதே பகுதியில் பால்கோவா தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு மதுமதியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்மநபர் பால்கோவா வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மதுமதி பால்கோவா எங்கு வந்து கொடுப்பது என கேட்டுள்ளார். போனில் பேசிய நபர் ஒரு முகவரியை கொடுத்துள்ளார். இதையடுத்து மதுமதி தனது தந்தை வெங்கடாசலத்துடன் பால்கோவாவை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் சென்றுள்ளார். ஈரோடு ஈவிஎன்ரோடு மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த வெங்கடாசலமும், மதுமதியும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காரில் வந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதையடுத்து மதுமதி செல்போனில் பால்கோவா ஆர்டர் கொடுத்தவர்களை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இதனால் மதுமதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக பிரபு (28), கோபி (33), வடிவழகன் (29) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மதுமதியின் உறவினரான பிரபு மற்றும் கோபி ஆகியோர் மதுமதியின் பால்கோவா கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகு வேலையை விட்டு நின்ற பிரபு தனியாக பால்கோவா கம்பெனி நடத்தி வந்துள்ளார். இதில் தொழில் போட்டி ஏற்பட்டதால், மதுமதியை காரை ஏற்றி கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று பால்கோவா ஆர்டர் கொடுப்பது போல அழைத்து கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.