கும்மிடிப்பூண்டி அருகே ஆசிரியை தீக்குளித்து தற்கொலை: சாவில் மர்மம் என தாய் புகார்
6/6/2025 3:48:42 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எடகண்டிகை பகுதியை சேர்ந்தவர் வித்யா (24). இவர் ஆசிரியை. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார் (எ) ரஜினி (27)க்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வித்யாவுக்கு 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு, இரண்டரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் ராஜ்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வித்யாவின் நகைகளை அடமானம் வைத்து அந்த பணத்தில் மது அருந்தி ஜாலியாக செலவு செய்துவந்ததாக தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வித்யா, தாய் எல்லம்மாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, கணவரும், மாமியாரும் 50 ஆயிரம் கேட்டு, என்னை அடித்து உதைக்கிறார்கள்’ என்று அழுதுள்ளார். அதற்கு எல்லம்மாள், ‘வட்டிக்கு வாங்கியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன், நீ கவலைப்படாதே’ என்று மகளை தேற்றியுள்ளார்.
இந்நிலையில் வித்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக எல்லம்மாளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்து கொண்டு, உறவினர்களுடன் மகளை பார்க்க சென்றார். வித்யாவின் உடல், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. மருத்துவமனைக்கு சென்ற எல்லம்மாள், மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி ஆரம்பாக்கம் போலீசில் எல்லம்மாள் கொடுத்துள்ள புகாரில், ‘ மகள் வித்யாவின் சாவில் அவரது கணவர் ராஜ்குமார், மாமியார் குமாரிக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.