திருத்தணியில் பைக் திருட்டு அதிகரிப்பு: புகார் மீது போலீசார் அலட்சியம்
6/6/2025 3:46:10 PM
திருத்தணி: திருத்தணி பகுதியில் பைக் திருட்டுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி புகார் கொடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். திருத்தணி சாய்பாபா நகரில் வசிப்பவர் கிறிஸ்டோபர். இவர் மடம் கிராம விஏஓவாக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின்னர் அவர் வந்தபோது பைக்கை காணவில்லை. திருத்தணி அருகே பிஜிஎன்.கண்டிகை பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் நேற்று திருத்தணி பஸ் நிலையம் அருகே சன்னதி தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். பின்னர் அவர் வந்தபோது பைக்கை காணவில்லை என்றதும் திடுக்கிட்டார். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் திருத்தணி போலீசில் புகார் செய்துள்ளனர்.
இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: திருத்தணி நகர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் அடிக்கடி பைக் திருட்டுப்போனது. இதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்த போலீசார், பொதுமக்கள், வியாபாரிகளிடம் பணம் வசூலித்தனர். திருத்தணி பஸ் நிலையம், பைபாஸ் சாலை, சன்னதி தெரு உள்பட முக்கிய பகுதிகள் என பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. பிறகு இவற்றை பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.
தற்போது திருத்தணி பகுதியில் அடிக்கடி பைக் திருட்டு நடைபெறுகிறது. இதுவரை சுமார் 300க்கு மேற்பட்ட பைக்குகள் திருடப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் கொடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது கிடையாது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து பார்ப்பது கிடையாது. போலீசாரின் நடவடிக்கை மிகவும் மெத்தனமான உள்ளது. எனவே, இவ்விஷயத்தில் எஸ்பி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்காக பணி செய்யாத போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக் திருட்டை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும்.