‘நான் ரப்பர் ஸ்டாம்ப் கவர்னர் இல்லை’ நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி
6/5/2025 3:44:20 PM
புதுச்சேரி: புதுவையில் காங்கிரஸ் அரசு பதவியேற்றதும் மத்திய பாஜ அரசால் கவர்னர் கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றது முதல் அவருக்கும், ஆட்சியாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நகராட்சி ஆணையர் இடமாற்றல் விவகாரத்தில் இம்மோதல் பகிரங்கமாக வெடித்தது. கவர்னரும், முதல்வரும் நேரடியாக மோதலில் ஈடுபட்டனர். இதனிடையே முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர், முதல்வர் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 2ம்தேதி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது ஊழல் புகார்களை ஆதாரமின்றி கூறி அவதூறு பரப்பக்கூடாது. இதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கவர்னர் கிரண்பேடிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கவர்னருக்குதான் மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரம் உள்ளதாகவும், என்னென்ன அதிகாரங்கள் கவர்னருக்கு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியள்ளார். கவர்னர் என்பவர் தனது விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டுமென முதல்வர் கருதுகிறாரா?. பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்படும் நிலையில் தவறுகள் நடக்க அனுமதிக்கப்படுகிறது. எந்த விளக்கமும் பெறாமல் கோப்புகளுக்கு அனுமதி தரும் துணைநிலை ஆளுநர் இருக்க வேண்டுமா?.
நான் வெறும் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி எண்ணுகிறாரா? தகுதி, செயல்திறன் இல்லாத அதிகாரிகளுக்கு பணியிடங்கள் இல்லாத நிலையிலும் பதவி உயர்வு தர வேண்டுமா? ஆளுநர் வெறும் பார்வையாளராக, ஆளுநர் மாளிகையில் சலுகைகளை அனுபவிப்பவராக இருக்க வேண்டுமா? மக்களை சந்திக்காமல், அதிகாரிகளை கேள்வி கேட்காமல், தனித்து இருக்க வேண்டுமா? ஆட்சியாளர்கள் கூறுவதை பேசாமல் செயல்படுத்த வேண்டுமா?. யூனியன் பிரதேச சட்டத்தின்படி முதல்வர் மற்றும் கவர்னருக்கு பொறுப்புகளும், கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதில் முதல்வர் தான் தற்போது பணிவிதிகளை மீறி செயல்படுகிறார். இவ்வாறு டுவிட்டரில் கிரண்பேடி கூறியுள்ளார்.