என்டிடிவி தொலைக்காட்சி இயக்குனர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு: டெல்லியில் பரபரப்பு
6/5/2025 3:40:59 PM
புதுடெல்லி: டெல்லியிலுள்ள என்டிடிவி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனரான பிரணாய் ராய் வீடு உள்பட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ரூ.48 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், என்டிடிவி நிர்வாக இயக்குனர் பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் என டெல்லி மற்றும் டேராடூன் உள்பட 4 இடங்களில் இன்று அதிகாலையிலிருந்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதார நிபுணரான ராய் ஆரம்பத்தில் சார்ட்டட் அக்கவுன்டன்ட்டாக வேலை செய்து வந்தார். பட்ஜெட் குறித்தும், தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்தும் கணக்கீடு செய்து மக்களிடம் கொண்டு செல்வதில் சிறந்து விளங்கிய ராய் 1988ல் என்.டி.டி.வியை தொடங்கினார். இவரது வீட்டில் ரெய்டு நடந்து வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி தெற்குப் பகுதியான கைலாஷ் பகுதியில் ராயின் வீடு அமைந்துள்ளது. இப்போது அந்த பகுதியில் ஏரளாமான பத்திரிக்கையாளர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.