3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு
6/5/2025 3:36:43 PM
கோவை: தங்கத்திற்கு 3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பு அறிவிப்பால் பாரம்பரிய நகை தொழில் அழியும் என்றும், தங்கம் கிராமிற்கு ரூ.4,500 வரை விலை உயரும் என்றும் தங்க நகை தொழில் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு வரும் ஜூலை 1ம் தேதி தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இதில் தங்க நகைக்கு 1.25 சதவீதம் வரிக்கு மிகாமல் விதிக்க தங்க நகை தொழில் கூட்டமைப்பினர் கோரியிருந்தனர். ஆனால், அதற்கு மாறாக, நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பில், தங்க நகைக்கு 3 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாரம்பரிய நகை தொழில் அழியும், பவுன் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக நகை தொழில் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது நகைகளுக்கு ஒரு சதவீதம் வாட் வரியும், ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்பவர்களுக்கு ஒரு சதவீதம் மத்திய அரசின் கலால் வரியும் விதிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு தற்போது 3 சதவீத ஜி.எஸ்.டி.வரியை விதித்துள்ளது.
மேலும் நகை உற்பத்தி தொழிலில் உள்ள உருக்குதல், கம்பி இழுத்தல், கல் பதித்தல், மெருகூட்டுதல் போன்ற பல்வேறு நிலைகளிலான பணிகளை கூலிக்காக செய்பவர்களுக்கும், பழைய நகைகளை சரி செய்பவர்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரியமாக நகை தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் நிறுவனங்கள் மட்டுமே தொழிலில் நீடிக்கும் நிலை உருவாகும். மேலும் 3 சதவீதம் வரி விதிப்பால் தங்கம் கிராம் ரூ.4,500 வரை (பவுன் ரூ.36ஆயிரம்) விலை உயர்ந்து, நுகர்வோரும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். 1.25 சதவீத வரி விதிப்பதுடன் தாலி, கொலுசு போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்துவெங்கட்ராம் கூறினார்.