தவறான ஆபரேஷனால் பெண் சாவு? எஸ்ஆர்எம் மருத்துவமனை முற்றுகை
6/5/2025 3:35:56 PM
செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த தட்டாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அமுலு (40). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமுலு. கடந்த 30ம் தேதி, காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், ‘கிட்னியில் கல் இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். அத்துடன் ஆபரேஷன் செய்ய முதல்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை செலுத்தும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியதையடுத்து அந்த பணத்தை ராமலிங்கம் கட்டியுள்ளார். இன்ஸ்சூரன்ஸ் மூலம் ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டது. ரொக்கமாக மேலும் ரூ.50 ஆயிரம் செலுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 3ம் தேதி அமுலுக்கு ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் முடிந்ததும் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
நேற்றிரவு திடீரென அமுலு இறந்துவிட்டார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். தவறான சிகிச்சையால் தான் இறந்துவிட்டார் என்று கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எந்த தகவலும் சொல்லவில்லை. இதுபற்றி மறைமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில், ‘தவறான சிகிச்சையால்தான் அமுலு இறந்துவிட்டார். எஸ்ஆர்எம் மருத்துவமனைதான் காரணம்’ என்று கூறியிருந்தனர். இதனிடையே மரணத்துக்கான சரியான காரணம் சொல்லும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இறந்த அமுலு புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் கூவத்தூர் சகாதேவனின் தங்கை. இதுபற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாநில செயலாளர் சகாதேவன் கூறுகையில், ‘தவறான சிகிச்சை அளித்ததால்தான் தங்கை இறந்துவிட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு, ஐசியு வார்டில் வைக்காமல் பொது வார்டுக்கு மாற்றியுள்ளனர். இதுபற்றி கேட்டால் மருத்துவமனை நிர்வாகம் சரியான பதில் சொல்லவில்ைல. பணத்தை கட்டினால்தான் ஆபரேஷன் என்று கறாராக சொல்கிறார்கள். அலட்சியமாக ஆபரேஷன் செய்து தங்கையை கொன்று விட்டனர். மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம்’ என்றார்.