ஹாலிவுட் பாணியில் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை : சிஆர்பிஎப் முகாமை தாக்கிய 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை
6/5/2025 3:34:00 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) முகாமை தாக்கிய 4 தீவிரவாதிகளை துணை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர்.
காஷ்மீரில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் எல்லைகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் ஊடுருவலை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு ராணுவ ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சூழலில் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை சும்பல் என்ற இடத்தில் சிஆர்பிஎப் முகாமை தீவிரவாதிகள் தாக்கினர்.
இன்று அதிகாலை 3.45 மணி அளவில் பயங்கர ஆயுதங்களை தாங்கிய தீவிரவாதிகள் சும்பல் முகாமுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கோபுரத்தின் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து உஷாரான துணை ராணுவ படையினர் தீவிரவாதிகள் மீது திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் ஹாலிவுட் சினிமா பாணியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலானது இன்று அதிகாலை 6.15 மணி வரை நீடித்தது. தகவல் அறிந்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் ராணுவ முகாம் மீது தற்கொலை தாக்குதலை நடத்த நினைத்த சதி முறியடிக்கப்பட்டது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்து ஏகே 47 துப்பாக்கிகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றனர். இதை காஷ்மீர் காவல்துறை டிஜிபி சேஷ்பால் வைத் உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிடட்ரில். சும்பல் முகாமை தாக்க முயற்சித்த 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு அங்கு மேலும் தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.