2வது மாடியில் இருந்து தரதரவென இழுத்துவந்து ஓபிஎஸ் அணி நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை
6/5/2025 3:33:23 PM
சென்னை: எம்ஜிஆர்.நகரில் வசித்துவந்த ஓபிஎஸ் அணி நிர்வாகியை 2வது மாடியில் இருந்து தரதரவென இழுத்துவந்து வீட்டுவாசலில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்ஜிஆர். நகர் சூளைப்பள்ளம் அண்ணா தெருவை சேர்ந்தவர் குமார் (என்ற) சின்னக்குமார் (39). இவர் அதிமுக.வில் 137வது வட்ட துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். அதிமுக இரண்டாக உடைந்ததை தொடர்ந்து ஓபிஎஸ் அணியின் நிர்வாகியாக பணியாற்றிவந்தார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். இவருக்கும் நண்பர் ஒருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றிரவு 11 மணி அளவில் சின்னக்குமார் வசித்துவரும் 2வது தளத்தில் உள்ள வீட்டுக்கு 5 பேர் வந்தனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள், வீடு புகுந்து சின்னக்குமாரை அடித்து உதைத்து வீட்டிலிருந்து வெளியே இழுத்தனர்.
பின்னர் மாடிப்படி வழியாக தர தரவென இழுத்துவந்து வீட்டு வாசல் முன்பு வைத்து சரிமாரியாக வெட்டினர். கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சின்னக்குமார் துடி துடித்துக் கொண்டிருந்தார். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சின்னக்குமாரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சின்னக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் எம்ஜிஆர். நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஓபிஎஸ் அணி நிர்வாகி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதால் எம்ஜிஆர். நகர் பகுதியில் பீதி நிலவுகிறது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் சின்னக்குமார் நண்பர் சீனிவாசன் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.