மூன்று அணியாக ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் : தமிழக சட்டசபை ஜூன் 14ல் கூடுகிறது
6/5/2025 3:32:49 PM
சென்னை: ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மூன்று அணியாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 14ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், 2017-18ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 24ம் வரை நடந்தது. வழக்கமாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், துறை வாரியான மானிய கோரிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யபட வேண்டும். அப்போது, ஒவ்வொரு துறைக்கான மானிய கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு அந்த துறைக்கான செலவினங்கள் மற்றும் நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலை சட்டசபையில் நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும்.
ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், சட்டசபை கூட்டம் தொடர்ந்து நடத்தாமல் மார்ச் 24ம் தேதியுடன் முடித்து வைக்கப்பட்டது. தேர்தலுக்கு பிறகு சட்டசபை மீண்டும் கூடும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து அங்கு தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக சட்டசபையை கூட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், 2 மாதங்கள் ஆன பிறகும் சட்டசபை கூட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 19ம் தேதி சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்தார். மேலும், இது தொடர்பாக கவர்னருக்கும் கடிதம் எழுதினார்.
ஆனால், சட்டசபையை கூட்ட நடவடிக்கை எடுக்காமல், கடந்த 11ம் தேதி கூட்ட தொடரை முடித்து வைப்பதாக கவர்னர் அறிவித்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஜூன் 3ம் தேதி (நேற்று முன்தினம்) கருணாநிதியின் வைரவிழா நடைபெறுகிறது. அப்போது, சட்டசபை நடந்தால் திமுக உறுப்பினர்கள் கருணாநிதியை பாராட்டி பேசி, அது அவையில் பதிந்து விடும் என்பதால் அதை தவிர்ப்பதற்காக சட்டசபையை கூட்டப்படாமல் இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், சட்டசபை விரைவில் கூட்டப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கடந்த வாரம் ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தெரிவித்திருந்தார். அதன்படி, வருகிற 14ம் தேதி சட்டசபை கூடும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக சட்டப்பேரவை செயலாளர் (பொறுப்பு) க.பூபதி இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக சட்டப்பேரவை ஜூன் 14ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூடும்” என்று அறிவித்துள்ளார்.
அதன்படி, ஜூன் 14ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அன்றைய தினத்தில் இருந்து ஒவ்வொரு நாளும், ஒன்று அல்லது இரண்டு மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும். முன்னதாக, எந்தெந்த தேதியில் என்னென்ன மானிய கோரிக்கை தாக்கல் செய்வது, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வருகிற 13ம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்து அறிவிக்கும். அநேகமாக ஜூன் 14ம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டம் ஜூலை மாதம் 14ம் தேதி வரை அதாவது ஒரு மாதம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசியல் பரபரப்புக்கு இடையே கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.
குறிப்பாக இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தபடவுள்ள எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மசோதா, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி மசோதா, தமிழகத்தில் நிலவும் வறட்சி, குடிநீர் தட்டுபாடு, விவசாயிகள் தற்கொலை, மதுக்கடைகளுக்கு எதிராக தொடரும் பெண்கள் போராட்டம், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டு இறைச்சி தடைக்கு தமிழக அரசு மவுனம் காத்து வருவது, நீட் தேர்வு பிரச்னை, பாடநூல் மாறற்ம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் சட்டசபையில் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என சட்டசபையில் இரண்டு அணியாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது டி.டி.வி.தினகரன் அணி என புதிய அணியும் உருவாகி உள்ளது. இப்படி ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், சட்டசபையில் மூன்று அணியாக செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், சட்டப்பேரவை கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.