ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியை ரசித்த விஜய் மல்லையா
6/5/2025 3:30:59 PM
புதுடெல்லி: வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் பதுங்கியுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா நேற்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கும் படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எஸ்பிஐ உள்ளிட்ட பொது துறை வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி வரை கடன் மோசடி செய்து விட்டு பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் பதுங்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசு படாதபாடு பட்டு வருகிறது. இருந்த போதிலும் எதுவும் செய்ய இயலவில்லை. சிபிஐ, அமலாக்கத்துறை, சுப்ரீம் கோர்ட் ஆகியவை சம்மன் அனுப்பியும் விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்தபடி மிகவும் ஜாலியாக இந்திய கிரிக்கெட் விளையாட்டை விஜய் மல்லையா ரசித்தார். வங்கி கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் விஜய் மல்லையா நேற்று பகிரங்கமாக கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கும் போட்டோ, வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கருடன் இருக்கும் புகைப்படங்களும் டுவிட்டரில் வெளியாகி இருந்தன. தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.