ஓட்டு இயந்திர தில்லுமுல்லு விவகாரம் தேர்தல் ஆணையத்தின் சவால் வெறும் கண்துடைப்பு நாடகம்: என்சிபி குற்றச்சாட்டு
6/4/2025 3:11:51 PM
புதுடெல்லி: ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லுகளை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் சவால் வெறும் கண்துடைப்பு நாடகம் என என்சிபி குற்றம் சாட்டியுள்ளது.தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று நடத்திய ஓட்டு இயந்திர தில்லுமுல்லு நிரூபண சவாலில் தேசிய வாத காங்கிரஸ், சிபிஎம் ஆகிய கட்சிகளின் தலா 3 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த சூழலில் தேர்தல் ஆணையம் நடத்திய சவால் கண்துடைப்பு நாடகம் என அதில் பங்கேற்ற என்சிபி குற்றம் சாட்டியுள்ளது. சவாலில் பங்கேற்ற என்சிபி பிரதிநிதி வந்தனா சவான் கூறுகையில், சவாலுக்கு தேவையான நாங்கள் கேட்டிருந்த தகவல்களை தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை. மேலும் நடைமுறையில் திடீரென கடைசி நேரத்தில் மாற்றத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது என்றார்.இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கு எழுதிய கடிதத்தில் ஓட்டு இயந்திரத்தின் பேட்டரி மற்றும் சேமிப்பகம் ஆகியவற்றின் சீரியல் நம்பர் தொடர்பான தகவல்களை அளிக்க வேண்டும். இதை தனியாக குறிப்பிட்டு நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் இந்த தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்தும் கொடுக்கவில்லை.
இந்த தகவல்களை தேர்தல் ஆணையம் ஏன் அளிக்கவில்லை என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 30ம் தேதி தேர்தல் ஆணையம் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் 5 மாநில தேர்தல்களில் பயன்படுத்திய ஓட்டு இயந்திரங்களில் சராசரியாக 14 இயந்திரங்களை தேர்வு செய்து தருகிறோம். அவற்றில் 4ஐ எடுத்துக் கொண்டு உங்களது சவாலை நிரூபித்து காட்டுங்கள் என்று கூறியது. திடீரென தேர்தல் ஆணையம் இவ்வாறு முரண்பாடாக நிபந்தனை விதித்தது ஏன் என்று தெரியவில்லை என்றும் சுட்டி காட்டினார். மேலும் ஓட்டு இயந்திரத்தின் மதர்போர்டில் உள்ள ஆதார குறியீட்டை எரித்தது யார்? இந்த ஓட்டு இயந்திரத்திற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை கொடுத்தது எந்த நிறுவனம்? இந்திய நிறுவனமா? வெளிநாட்டு நிறுவனமா? ஒவ்வொரு தேர்தலின் போதும் மதர்போர்டில் ஆதார குறியீடுகளை எழுதுவது யார்? அதை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்வது யார் உள்ளிட்ட 8 கேள்விகளை என்சிபி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் கேட்ட போது, இது தொடர்பாக நீண்ட ஆலோசனைக்கு பிறகுதான் பேட்டரி மற்றும் சேமிப்பகத்தின் சீரியல் எண்களை அகற்றி விட்டு சவாலுக்கு இயந்திரங்களை வழங்கினோம். தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரையில் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. அவர் கூறியது குறித்து இன்னும் எனது கவனத்திற்கு வரவில்லை. எனவே அது தொடர்பாக நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொழில்நுட்ப குழுவினர் அளித்த விளக்கங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குழுவினர் திருப்தி தெரிவித்ததாகவும், எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இரண்டு கட்சியினரும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.எனவே இனிமேல் இது போன்ற சவால்களை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.