இரு அணிகளும் இணையும் என்று அமைச்சர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
6/2/2025 4:15:12 PM
நாகை: இரு அணிகளும் இணையும் என்று அமைச்சர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
நாகை மாவட்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயபால் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:
தற்போது நடந்து வரும் ஆட்சி சசிகலாவின் பினாமி ஆட்சி. எந்த குடும்ப ஆதிக்கத்தின் கீழ் கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என ஜெயலலிதா விரும்பினாரோ அது நிறைவேற்றப்படவில்லை.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. எனவே சிபிஐ விசாரணை நடத்தி உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதையும் இந்த பினாமி ஆட்சி கேட்கவில்லை. இந்த நிலை நீடித்தால் மக்கள் புரட்சி வெடிக்கும். இரு அணிகளும் இணையும் என அமைச்சர்கள் தவறான தகவல்களை கூறுகின்றனர். இன்னும் பேச்சு வார்த்தையே நடக்கவில்லை. எங்களது நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.