டெல்லியில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம்
6/2/2025 3:57:06 PM
புதுடெல்லி: டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை மிதமான நில நடுக்கம் உணரப்பட்டது. அரியானாவில் உள்ள ரோட்டக் மாவட்டத்தை மையமாக வைத்து இன்று காலை 4.25 மணி அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அரியானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.0 புள்ளிகளாக பதிவானதாக புவியியல் ஆய்வு மைய அதிகாரி வேத பிரகாஷ் தாக்குர் தெரிவித்தார். அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.
கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கமானது சுமார் 1 நிமிடங்கள் வரை நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நல்வாய்ப்பாக இதன் காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை. பின்னர் மீண்டும் 8.15 மணிக்கும் டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இரண்டாவது முறையாக ரிக்டர் அளவுகோலில் 3.2 புள்ளிகளாக பதிவானது. நில நடுக்கம் காரணமாக டெல்லிவாசிகள் இன்று காலை அச்சத்துடன் கண்விழித்ததால் பரபரப்பு நிலவியது.