நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு
6/2/2025 3:51:04 PM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காப்பணாமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (45). விவசாயி. நடப்பாண்டில் இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இவரது நெற்பயிரும் கருகியது.
இந்நிலையில் கடந்த மாதம் கத்திரி வெயில் துவங்கிய போது குடவாசல் பகுதியில் ஓரளவு நல்ல மழை பெய்தது. இதனை பயன்படுத்தி வறட்சியைத் தாங்கும் பருத்தி பயிரை ரமேஷ் சாகுபடி செய்தார். இருப்பினும் அந்த பயிர் ஒரு மாத கால பயிராக வளர்ந்து வந்த நிலையில் அதன் பின்னர் மழை பெய்யாததால் பருத்தியும் கருகியது.
இதனால் வங்கியில் பெற்ற கடனை எப்படி செலுத்துவது என்ற வேதனையில் இருந்து வந்த ரமேஷ், மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிய பிறகு நள்ளிரவில் வீட்டின் கொல்லை புறத்திற்கு சென்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அவர் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.