டெல்லி சட்டப்பேரவையில் கபில் மிஸ்ராவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை
6/1/2025 5:08:20 PM
புதுடெல்லி: ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, டெல்லி சட்டப்பேரவையில் நேற்று தாக்கப்பட்டார். இதுகுறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜ வலியுறுத்தியுள்ளது.ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கபில் மிஸ்ரா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறினார். கெஜ்ரிவால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, உண்ணாவிரதமும் மேற்கொண்டார். இதனால், கபில் மிஸ்ரா மீது ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் கபில் மிஸ்ரா பங்கேற்றார். அப்போது, அங்கிருந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் கபில் மிஸ்ராவை தாக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை தாக்கியவர்களை யாரும் தடுக்கவில்லை என்றும், சம்பவம் நடந்ததை வேடிக்கை பார்த்ததோடு கெஜ்ரிவால் சிரித்துக்கொண்டிருந்தார் என கபில் மிஸ்ரா குற்றம்சாட்டினார்.
கபில் மிஸ்ரா தாக்கப்பட்டதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜ தலைவர்களுள் ஒருவரான ஆர்.பி.சிங் கூறுகையில், ‘‘இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. டெல்லி சட்டப்பேரவை வரலாற்றிலேயே இதுபோன்ற நிகழ்வுகளை நான் கண்டதில்லை. சக உறுப்பினரே உங்களின் ஊழல் குறித்து கேள்வி எழுப்பும்போது அவரை தாக்கியது எவ்விதத்தில் நியாயம். உச்சகட்டமாக, கெஜ்ரிவால் இச்சம்பவத்தை கண்டு சிரித்துள்ளார். மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள். சட்டப்பேரவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.