கிரிக்கெட் விளையாட்டு தகராறில் மூதாட்டி அடித்துக்கொலை? : பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரணை
6/1/2025 4:51:34 PM
ஆவடி: கிரிக்கெட் விளையாட்டு தகராறில்மூதாட்டியை அடித்துக்கொலை செய்ததாக பக்கத்து வீட்டுக்காரரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.ஆவடியை அடுத்த மோரை, புதிய கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி (80). இவர் மகள் சிந்தாமணி வீட்டில் வசித்து வருகிறார். சிந்தாமணியின் கணவர் ரகு, கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு சூர்யா (11), நந்தினி (9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.சிந்தாமணி வீடு அருகே கூலி தொழிலாளி கருணாகரன் (56) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்றிரவு 7 மணியளவில் சிந்தாமணியின் 2 குழந்தைகள் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகளுடன் ெதருவில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து கருணாகரனின் வீட்டுக்குள் விழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், கிரிக்கெட் விளையாடிய சிறுவர், சிறுமிகளை அசிங்கமாகத் திட்டியதாக தெரிகிறது.
இதுபற்றி சூர்யா, நந்தினி ஆகியோர் தாய் சிந்தாமணியிடம் நடந்த விஷயத்தை கூறி அழுதுள்ளனர். இதையடுத்து சிந்தாமணி, அவரது தனலட்சுமி, உறவினர் ரமேஷ் ஆகியோர் சென்று கருணாகரனிடம் ‘குழந்தைகளை ஏன் திட்டினீர்கள்?’ எனக் கேட்டுள்ளனர். அப்போது ரமேஷுக்கும் கருணாகரனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இதை தனலட்சுமி தடுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கருணாகரன், தனலட்சுமியை அடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் தனலட்சுமி மயக்கமடைந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு, ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தனலட்சுமியை சோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தனலட்சுமியின் சாவு குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்தனர். இரவோடு இரவாக உடலை அடக்கம் செய்ய முயற்சித்தனர்.
இதுகுறித்து அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, எஸ்ஐக்கள் நாசர், காந்தி ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அடக்கம் செய்ய தயாராக இருந்த தனலட்சுமியின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனிடம் விசாரித்து வருகின்றனர்.