2வது நாளாக அணையாத தீ: சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்தது; 30 மணி நேரத்திற்கு மேலாக எரியும் தீ
6/1/2025 3:48:44 PM
* புகைமண்டலமானது தி.நகர்
* பொதுமக்கள் வெளியேற்றம்
* அரசு செலவில் கட்டிடம் இடிக்க நடவடிக்கை
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் 30 மணி நேரத்தையும் தாண்டி 2வது நாளாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் தி.நகர், கோடம்பாக்கம் பகுதி முழுவதும் புகை மண்டலமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் என்ற பெயரில் 7 அடுக்கு மாடி கொண்ட ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 4.45 மணியளவில் கட்டிடத்தில் கரும்புகையுடன் தீ எரிய தொடங்கியது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 14க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மளமளவென பரவிய தீ கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் பற்றி எரிந்தது. இதனால், தி.நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. தீயை அணைக்க குடிநீர் வாரியம் மூலம் 30க்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீர் வழங்கப்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் வெளியில் இருந்து ஊழியர்கள் ஈடுபட்டாலும், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தீ பரவுவதை தடுக்க முடியாமல் வீரர்கள் தடுமாறினர். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், அந்த சாலைகள் அனைத்தும் போலீஸ் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க கடுமையாக வீரர்கள் போராடினர். நேற்றிரவு 11.20 மணியளவில் தீ ஒரளவுக்கு கட்டுபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும், 7வது மாடியில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டு தான் இருந்தது. ஒரு கட்டத்தில் பயங்கரமாக தீ எரிந்து கொண்டிருந்ததால் அதிகாலை 3.19 மணிக்கு 7வது மாடியில் இருந்து 2வது மாடி வரை கட்டிடத்தின் ஒரு பகுதி சீட்டு கட்டு போன்று மள,மளவென பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது. கட்டிடம் சரிந்த பிறகும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் வீரர்கள் யாரும் அருகில் செல்ல முடியவில்லை. அப்போது, கட்டிடத்தில் தீ எரிந்து கொண்டே தான் இருந்தது. கிரேன் மூலம் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இருந்த போதும், கட்டிடத்தின் முன்பகுதியும் இன்று காலை 7 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் தி.நகர் உஸ்மான் சாலை முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. அப்பகுதி சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல் இருக்கும் அளவுக்கு கரும் புகை முழுவதும் சூழ்ந்திருந்தது. இதனால், அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் செய்வதறியாமல் தவித்தனர். இதற்கிடையே புகைமண்டலம் காரணமாக தி.நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
பலர் வெளியேற்றப்பட்டனர். குடும்பத்துடன் வெளியேற வேண்டியிருந்ததால் சிலர் உறவின்ர வீடுகளுக்கும், பலர் வெளியூர்களுக்கும் சென்று விட்டனர். அந்த இடத்தை சுற்றியுள்ள வீடு மற்றும் கடைகளில் தங்கியுள்ளவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இரண்டாவது நாளாக அப்பகுதியில் கடைகளை திறக்க வேண்டாம் என்று அப்பகுதியில் கடை உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக தி.நகரில் உஸ்மான் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த வழியாக போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 30 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருப்பதால் கட்டிடம் வலுவிழந்த நிலையில் உள்ளது. இதனால், எந்த நேரத்திலும் கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலமாகவும் வாகனங்களில் வெளியே இருந்த படியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் திணறினர். ஒரு உயர் ரக ஸ்கைலிப்ட் பழுதாகியது. இதனால் சிறிய ரக ஸ்கைலிப்ட் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீயை ஒரு பகுதியில் அணைத்தால் மற்ற பகுதி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் நேற்று காலையில் தங்களது பணிகளை தற்காலிகமாக நிறுத்தினர். தீ தானாகவே எரிந்து முடியட்டும் என்று அமைதியாகிவிட்டனர்.
இதனால் கடைக்குள் இருந்த பொருட்கள் எரிந்து கொண்டிருக்கிறது. தீ கட்டுக்குள் வர இன்று மாலை வரை ஆகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர்தான் தீ விபத்து நடந்த பகுதியை குளிர்வித்து பின் கட்டிடத்தை முழுவதுமாக இடிக்க முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே தீ விபத்து பகுதியை அமைச்சர் உதயகுமார் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தீ விபத்து ஒரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த இடம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ முழுவதும் அணைந்த பிறகு அரசின் செலவில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்பாக கட்டிடத்தை இடிக்க ஐஐடி நிபுணர்கள் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
இந்த கட்டித்தில் கட்டப்பட்டதில் விதிமீறல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடக்கிறது. சென்னை சில்க்ஸ் கட்டிடம் அருகே உள்ள மற்ற கட்டிடங்கள் பாதிக்காதவாறு அந்த கட்டிடம் இடிக்கப்படும். எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடம் இடிக்கப்படும் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’ என்றார். முன்னதாக அதிகாலையில் அமைச்சர் ஜெயக்குமார், தென் சென்னை எம்பி ஜெயவர்த்தன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், வருவாய் துறை ஆணையர் சத்தியகோபால், சென்னை கலெக்டர் அன்புசெல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
கட்டிடத்தை இடிப்பது குறித்து ஆராய ஐவர் குழு : சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிப்பது குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஐஐடி பேராசிரியர் சாந்தகுமார், தலைமை பொறியாளர் விஜயராகவன், கண்காணிப்பு பொறியாளர் ஷீலா, செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெரிய விதிமீறல் கொண்ட 514 கட்டிடங்கள்:
சென்னையில் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 514 பெரிய கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, திறந்த வெளி இடம் ஒதுக்குவது, பார்க்கிங் வசதி, உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் இல்லாமல், பெரிய கட்டிடங்களாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக கடந்த 2011ல் சீல் வைக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட கட்டிடங்களில் உரிமையாளர் தொடர்ந்த வழக்கு தற்போது வரை நடந்து வருவதால் அந்த கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு துறை இயக்குனர் ஜார்ஜ் ஆய்வு:
தீ விபத்து நடந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை தீயணைப்பு துறை இயக்குனர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, கட்டிடத்தில் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் தீயணைப்பு அதிகாரிகளுக்கு அவர் சில ஆலோசனைகளை வழங்கினார்.