கால்நடை தீவன ஊழல் லாலுவுக்கு ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக சம்மன்
5/31/2017 3:45:47 PM
ராஞ்சி: பீகாரில் கடந்த 1990 முதல் 97 வரையிலான முதல்வர் லாலு தலைமையிலான ஆட்சியின் போது கால் நடை தீவன கொள்முதலில் ரூ.950 கோடி முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சிபிஐ தரப்பில் லாலு மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் மேல் முறையீட்டில் லாலு விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ முறையிட்டது. இந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. 9 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கில் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக லாலுவுக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒரு குற்றச்சாட்டுஇதற்கிடையில் லாலு மீது பாஜ மேலும் ஒரு நில மோசடி புகாரை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் சுஷில் குமார் மோடி நிருபர்களிடம் கூறுகையில், பாட்னாவில் உள்ள கவுடில்யா நகரில் 15 ஏக்கர் நிலம் எம்எல்ஏக்கள் கூட்டுறவு சங்கத்திற்காக லாலு ஆட்சியில் ஒதுக்கப்பட்டது. அதில் விதிமுறைகளை மீறி லாலு, ராப்ரி தேவி, எம்பி ஜெயபிரகாஷ் நாராயண் யாதவ், உறவினர் அனிருத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இடங்கள் யாவும் வணிக வளாகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான அறிக்கை ஏற்கனவே முதல்வர் நிதிஷ்குமாரிடம் கொடுத்துள்ளோம். விதிமுறைகளை மீறிய அந்த மனைகளின் உரிமத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.