மாட்டிறைச்சி தடைக்கு எதிராக சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம்: தமிழகத்தில் மீண்டும் மெரினா புரட்சி: ஸ்டாலின் எச்சரிக்கை
5/31/2017 3:40:58 PM
சென்னை: மாட்டிறைச்சி சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் மீண்டும் மெரினா புரட்சி உருவாகும் என்று திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாட்டிறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுகுட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க தடை விதித்து மத்திய அரசு கடந்த 26ம் தேதி உத்தரவிட்டது. இதனால் கால்நடை சந்தைகள் மூலமாக மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது. விவசாய தேவைக்காக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற சூழல் உருவாகி உள்ளது. இறைச்சி விற்பனையாளர்களும், தோல் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவை கண்டித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 9.50 மணிக்கு வந்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதல்கட்டமாக நாம் சென்னையில் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இந்த போராட்டம் தொடரும். மாட்டு இறைச்சிக்கு தடை போட்டதால் மாட்டு சந்தைகள் வெறிச்சோடி போய்விட்டன. ஏற்கனவே வறட்சி, மழை பொய்த்ததால் 400க்கும் மேற்பட்ட விசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில், மோடி அரசு இந்த கொடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 3 ஆண்டு பாஜ ஆட்சியில் சாதனை ஒன்றுமில்லை. வேதனை தான் மிஞ்சுகிறது. ஊழலை ஒழிப்போம் என்றார்கள். கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு ரூ. 15 லட்சம் தருவோம் என்று மோடி கூறினார். ரூ.15 கூட தரவில்லை. மோடி விரும்புவதை மட்டுமே நாட்டு மக்கள் சாப்பிட வேண்டும் என்கிறார். இதனால், தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. உண்ணும் உணவில் கட்டுபாடு விதிக்கிறார்கள்.
மாட்டிறைச்சி சம்பந்தமான வழக்கு 2007ல் இமாச்சல் பிரேதச நீதிமன்றத்தில் வந்த போது, மாநில பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு தடை போட முடியாது என்று கூறியது. இதே போல், ஒரு பொது நல வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாநிலத்திற்கு தான் அதிகாரம் என்ற நிலையில், இப்போது, திடீரென்று இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாஜ ஆட்சியில் மக்களுக்கு பயன்படும் வகையில் எந்த திட்டமும் சாதனையும் இல்லாததால் அதை மூடி மறைக்க, மக்களை திசை திருப்ப இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலமைச்சர்களை நகராட்சி தலைவர்களாக்கிவிட்டார்கள். மாநிலங்களை முனிசிபாலிட்டிகளாக ஆக்கிவிட்டார்கள். 6 ஆண்டு அதிமுக ஆட்சியில் 3 முதலமைச்சர்கள் இதுவரை பிரதமரை 5 முறை மட்டுமே சந்தித்துள்ளனர்.
தலைமை செயலகத்தில் ரெய்டு நடக்கிறது. மத்திய அமைச்சர் கோட்டை வந்து ஆய்வு செய்து முறையோடு செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார். இதைவிட வெட்ககேடு உண்டா? கருணாநிதி ஆட்சியில் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தார். இந்த சட்டம் போட்டு 8 நாள் ஆகிறது. முழுமையாக படித்து பார்த்துவிட்டு தான் பதில் கூறுவேன் என்று எடப்பாடி சொல்கிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் வருமான வரித்துறை, சிபிஐ தான். மற்ற மாநில முதல்வர்கள் மத்திய அரசு சட்டத்தை ஏற்க மறுக்கிறார்கள். நேற்று மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நான் மத்திய அரசையும் எதைப்பற்றியும் கவலைப்படாத தமிழக அரசையும் எச்சரிக்கிறேன். இது முதல்கட்ட போராட்டம். இந்த போராட்டம் தொடரும்.
இந்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் மெரினா புரட்சி தமிழகத்தில் உருவாகும். அந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில், கனிமொழி எம்பி, மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, சுதர்சனம், அன்பழகன், மா,சுப்ரமணியன், கும்மிடிப்பூண்டி கி.வேணு, ஆவடி நாசர், தா.மோ.அன்பரசன், விஸ்வநாதன், எம்எல்ஏக்கள் கே.எஸ் ரவிச்சந்திரன், கு.க.செல்வம், புகழேந்தி, எம்.கே.மோகன், வாகை சந்திரசேகர், தாயகம் கவி, எழிலரசன், மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி, தொண்டரணி செயலாளர் மாசிலாமணி, பேராயர் எஸ்ரா சற்குணம், தமிழ் மாநில தேசிய லீக் திருப்பூர் அல்தாப், முஸ்லீம் லீக் அப்துல் ரகுமான், கா.தனசேகரன், பிடிசி பாலு, சன்பிரேன்ட் ஆறுமுகம், இளைஞரணி துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், அசன் முகமது ஜின்னா, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன், சிறுபான்மை அணி செயலாளர் மஸ்தான், காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.