திருச்சி ஏர்போர்ட்டில் 7 கிலோ தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்
5/30/2017 3:39:02 PM
திருச்சி: சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சுங்கதுறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர், திருச்சி விமானநிலையத்துக்கு வந்த அனைத்து விமானங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமானநிலையத்திற்கு டைகர் ஏர்வேஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் போது பயணிகள் 4 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கதுறை அதிகாரிகள் அவர்களையும், அவர்களது உடைமைகளையும் பலத்த சோதனைக்கு உட்படுத்தினர்.
சோதனையில் உடல் மற்றும் உடைமைகளில், பல கோணங்களில் தங்கக்கட்டிகள் கடத்திக் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. 4 பயணிகளிடமிருந்தும் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் சுங்கதுறை அதிகாரிகள் ஏர்போர்ட் வளாகத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 3 பேரும் விமானத்தில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை பெற காத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் தங்கம் கடத்த பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.2.5 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கம் பிடிப்பட்டிருப்பது சுங்க துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிக்கியவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை விமானநிலையம் வழியாக அதிகளவில் தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வந்த நிலையில் திருச்சியில் 7 கிலோ தங்கம் பிடிப்பட்டிருப்பதும், இதுவே திருச்சி விமானநிலைய வரலாற்றில் அதிக அளவிலான கடத்தல் தங்கம் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.