பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா தொடக்கம்
5/30/2017 3:36:01 PM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீவல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரமோற்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பழமைவாய்ந்த ஸ்ரீவள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 8ம் ஆண்டு வைகாசி விசாக பிரமோற்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரரோ, கந்தனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர்.