கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது தமிழக உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்
5/30/2017 3:32:35 PM
சென்னை: கேரளாவில் இன்று முதல் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தலைநகர் சென்னையில் நேற்று வெப்பச் சலனம் காரணமாக திடீர் மழை பெய்தது. குறிப்பாக, வடசென்னை வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, இரவில் குளிர்காற்று வீசியதால் ஓரளவு வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையில், கேரளாவில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் ஒருநாள் முன்னதாக நேற்றே பருவமழை பெய்ய தொடங்கியது. திருவனந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. கேரளாவில் பருவமழை தவறாமல் பெய்யும் பட்சத்தில், அதன் தாக்கமாக தென் மாவட்டங்களான கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு பருவமழை போதிய அளவுக்கு பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:தெற்கு அரபி கடல் பகுதியில் ஈரப்பதம் மிகுந்து காணப்படுகிறது. தென்மேற்கு திசையில் காற்று வலுப்பெற்று வருவதால் கேரளாவில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை உள்மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம். அதேபோல் தென்மாவட்டத்திலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்யும். வங்கக் கடலில் உருவான மோரா புயல் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் கரையை கடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.