கோடநாடு கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது: கோத்தகிரியில் ரகசிய இடத்தில் விசாரணை
5/29/2017 3:01:16 PM
கோத்தகிரி: கோடநாடு காவலாளி கொலை, கொள்ளையில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களாவில், கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இரவு 2 காரில் புகுந்த கொள்ளையர்கள் காவலாளி ஓம்பகதூரை ெகாலை செய்து விட்டு பணம், நகை, ஆவணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். கொலையாளிகளை பிடிக்க நீலகிரி எஸ்.பி முரளிரம்பா தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய விசாரணையில் 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
இக்கொலை தொடர்பாக கேரளாவை சேர்ந்த சந்தோஷ் சாமி (39), தீபு (32), சதீஷன் (42), உதயகுமார்(47), வாளையாரை சேர்ந்த மனோஜ், வயநாடு பகுதியை சேர்ந்த மனோஜ்சமி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியும் ஜெ.கார் டிரைவருமான கனகராஜ் சேலத்தில் நடந்த கார் விபத்தில் பலியானார். இவரது நெருங்கிய கூட்டாளியான சயான் கார் விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இக் கொலையில் தொடர்புடைய 11 வது குற்றவாளியான குட்டி (எ) பிஜினை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தி நேற்று அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து இன்று காலை அவரை கோத்தகிரி அழைத்து வந்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக போலீசார் 10 பேரையும் கைது செய்து விட்டனர். கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியாகி விட்டார். எனவே இத்துடன் இக் கொலை வழக்கை போலீசார் முடித்து விடுவார்களா அல்லது இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணை தொடருமா என்பது விரைவில் தெரியும்.