மனைவி சடலத்துடன் சென்னைக்கு ஆம்புலன்சில் வந்தவர் விபத்தில் பலி
5/29/2017 2:50:24 PM
வேப்பூர்: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் பாபு (70). இவர் தனது மனைவி ராகினி (65)யுடன், நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள தனது சொந்த ஊரான இலஞ்சிக்கு வந்திருந்தார். அங்கு எதிர்பாராதவிதமாக ராகினி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடலை ஆம்புலன்சில் சென்னைக்கு பாபு நேற்று கொண்டு சென்றார். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் மீது ஆம்புலன்ஸ் மோதியது. மோதிய வேகத்தில் எதிர் திசையில் திரும்பி நின்றது.
அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் பாபு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் தென்காசியை சேர்ந்த சண்முகம் (55) படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த டிரைவர் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்த பாபுவின் உடலும் உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து காரணமாக வேப்பூர் கூட்டு ரோட்டில் ஒரே வழித்தடத்தில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, எதிரே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் காரில் வந்த கேரளாவை சேர்ந்த வினோ, புனோ, தாமஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.