செங்கோட்டை அருகே சிறுத்தை தொடர் அட்டகாசம் விவசாயிகள் அச்சம்
5/29/2017 2:48:37 PM
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள பண்பொழி, மேக்கரை, வடகரை உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வனவிலங்குகள் அதிகமாக வனப்பகுதிகளில் இருந்து இறங்கி உணவு தேடி மலையை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து அங்கு வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை தூக்கி சென்றும் பொதுமக்களை பயமுறுத்தியும் வருகிறது. நேற்று மேக்கரை 5 வது வளைவு பகுதியில் இரவு 11 மணி அளவில் சிறுத்தை புலி இந்த பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவர் வீட்டு முன்பு காவலுக்கு வளர்த்த இரண்டு நாய்களில் ஒன்றை கொன்று தின்றுவிட்டது மற்றொரு நாயை பாதி கடித்து தின்ற நிலையில் போட்டு சென்றது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த கடையநல்லூர் வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கொன்றது சிறுத்தை தானா என ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரது வீட்டில் வளர்த்த 3 ஆடுகள் மற்றும் ஒரு நாயை கொன்று தூக்கி சென்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பண்பொழி கிராமம் கீழ ஊர்ச்சாவடி தெருவை சார்ந்த விவசாயி சுப்பையா(60) என்பவரை கடித்து கொன்றது. தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கிராமங்களை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.