‘ஆரூரா... தியாகேசா’ கோஷம் விண்ணதிர திருவாரூரில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்
5/29/2017 2:47:54 PM
திருவாரூர்: ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆரூரா... தியாகேசா கோஷம் விண்ணதிர, லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழித்தேர் உலா வந்தது. சைவ சமயத்தின் தலைமைப்பீடமாகவும், சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர். இத்தகைய சிறப்புபெற்ற இக்கோயிலின் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 22ம் தேதி உற்சவர் தியாகராஜர் சுவாமி தேரில் எழுந்தருளினார். தினமும் தேரில் சுவாமிக்கு 6 கால பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. இந்த தேர்கள் இன்று ஆழித்தேருக்கு முன் செல்ல வசதியாக நேற்று மாலை மேலகோபுரம் அருகே நிறுத்தப்பட்டது.
இன்று அதிகாலை முதல் ஆழித்தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை 7.15 மணிக்கு புனர்பூச நட்சத்திரத்தில் கீழவீதியிலிருந்து ஆழித்தேரோட்டம் துவங்கியது. 30 அடி அகலம், 30 அடி உயரம், 220 டன் எடை கொண்ட ஆழி தேர் மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆழித்தேரோட்டத்தை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார். லட்சக்கணக்கான பக்தர்கள், ‘தியாகேசா.... ஆரூரா’ கோஷம் விண்ணதிர பக்திப்பரவசம் பொங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆழித்தேர் தெற்குவீதிக்கு திரும்பியதும் அடுத்தடுத்து நீலோத்தாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. மதியம் 12.30 மணி அளவில் ஆழித்தேர் மேலகோபுரம் அருகே வந்ததும் அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள விநாயகர், சுப்ரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டு நிலைக்கு கொண்டு செல்லப்படும்.
தொடர்ந்து ஆழித்தேர், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டு நிலையை அடையும். தேர்கள் கீழவீதியிலிருந்து தெற்கு, வடக்கு, மேலவீதி வழியாக வந்து பின்னர் மீண்டும் கீழ வீதிக்கு வந்து மாலை 5 மணி அளவில் நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் சிறப்பு பூஜையுடன் அஜபா நடனத்துடன் தியாகராஜர் சுவாமியை கோயிலுக்குள் கொண்டு செல்கின்றனர். தேரோட்டத்தையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆழித்தேரோட்டத்தையொட்டி 8 மாவட்டங்களை சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகை, தஞ்சை, மன்னார்குடி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து திருவாரூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த ஆழித்தேரோட்டம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
சென்னை வாலிபர் பலி
கொள்ளிடம்: சென்னை எழும்பூரைச் சேர்ந்த கபாலி மகன் கார்த்தி(18). டிப்ளமோ படித்துள்ளார். சக நண்பர்களுடன், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து திருவாரூர் செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவரது நண்பர்கள் ரயிலின் உள்ளே இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், கார்த்தி மட்டும் ரயிலின் படியில் அமர்ந்திருந்தார். நேற்று நாகை மாவட்டம் கொள்ளிடம் ரயில்வே பாலம் அருகே வந்தபோது தூக்ககலக்கத்தில் கார்த்தி தடுமாறி, தவறி ரயிலிலிருந்து கீழே விழுந்தார். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார்.