சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம் ஆஸ்திரேலியா - இலங்கை இன்று பலப்பரீட்சை
5/26/2017 3:07:57 PM
லண்டன் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, லண்டன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.00 மணிக்கு தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் மினி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் (சாம்பியன்ஸ் டிராபி), இங்கிலாந்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட, தரவரிசையில் டாப் 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஏ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன.பிரதான போட்டிக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 28ம் தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது. அடுத்து 30ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது.