தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது
5/17/2017 2:46:50 PM
திருச்சி: சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவராக உள்ள செல்வராஜ் என்பவரிடம் திருச்சி பொன்னகரில் கிறிஸ்தவ மத போதனை சபை நடத்தி வரும் தலைமை மதபோதகர் நார்மன் பாஸ்கர்(64) சபைக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் நிலத்தை விற்க போவதாக கூறியுள்ளார். இதை நம்பிய தனியார் நிறுவனத்தின் தலைவர் செல்வராஜ் மற்றும் துணைத் தலைவர் தங்கையா ஆகியோர் சபை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2011ல் ரூ.7 கோடிக்கு வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பல தவணைகளில் வங்கிகள் மூலமாக ரூ.6.88 கோடி கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள தொகையை பத்திரவு பதிவு செய்யும்போது தருவதாக தனியார் வீட்டு வசதி நிதி நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பணம் பெற்றுக்கொண்டு பல மாதங்கள் ஆகியும் பத்திர பதிவு செய்வதில் காலம் கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தனியார் நிதி நிறுவன துணை தலைவர் தங்கையா, நார்மன் பாஸ்கரிடம் கேட்டபோது தலைமைக்குழு சொத்துகளை விற்க மறுக்கிறது என்று கூறி கொடுத்த பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்போதைய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மோசடி செய்தது தெரிய வர 15.8.2016ல் நார்மன் பாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான நார்மன் பாஸ்கரை 9 மாதத்திற்கு பிறகு தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நார்மன் பாஸ்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.