காதுகேளாதோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தாளாளர் உள்பட 5 பேருக்கு சிறை
5/10/2025 3:50:26 PM
சோமனூர்: கோவை சோமனூர் அடுத்த கோதபாளையம் மற்றும் முருகன்பாளையத்தில் ‘திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளின், தாளாளர் முருகசாமி(57). கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 82 மாணவர்கள், 102 மாணவிகள் என மொத்தம் 184 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், படித்து முடித்தவர்கள் இதே பள்ளியில் பணியாற்றி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கோதபாளையம் பள்ளியின் முன்னாள் மாணவியும், தற்போது பள்ளியில் நிர்வாக பணிகள் கவனித்து வருபவருமான வாய்பேச இயலாத இளம்பெண் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் நேற்று தன் கணவருடன் வந்துஒரு புகார் அளித்தார்.
அதில், 2012-14 ஆண்டுகளில் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் படித்த போது பள்ளியின் தாளாளர் முருகசாமி பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், நான் கர்ப்பமானேன். ஆறு மாத கர்ப்பிணியான என்னை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீட்டில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கருகலைப்பு செய்தார். மேலும், தற்போதும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார் என கூறி இருந்தார்.
இந்த புகார் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது பாலியல் குற்றம், பள்ளி மாணவிகளை ஏமாற்றுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவி செய்த பள்ளியின் துப்புரவு தொழிலாளி சித்ராதேவி(40), பயிற்றுனர்கள் பிரமிளா(28), ரேவதி(30), பாபு (35) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.