பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸ் 312 ரன்னில் ஆல் அவுட்
5/2/2025 5:37:03 PM
பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ்பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் பார்படாஸில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 131, கேப்டன் ஜேசன் ஹோல்டர் 58 ரன்களுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை விளையாடினர். தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் முறையே 131, 58 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிஷு 14, அல்ஜாரி ஜோசப் 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4, முகமது ஆமிர் 3, யாசிர் ஷா 2, சதாப் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. அகமது ஷெசாத் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம், யூனுஸ்கான் டக் அவுட்டாயினர். அசார் அலி 81, கேப்டன் மிஸ்பா உல் ஹக் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில் பாகிஸ்தான் இன்னும் 140 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.