அர்ஜூனா, கேல் ரத்னா விருதுக்கு புஜாரா, சர்தார் சிங் பெயர் பரிந்துரை
5/2/2025 5:36:31 PM
புதுடெல்லி: விளையாட்டு துறையில் சிறந்த விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படவுள்ள அர்ஜூனா விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணி வீரர் புஜாரா, மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகிய இருவர் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் புஜாரா. நடப்பு ஐபிஎல் சீசனுக்காக ஏலத்தில் அவர் விலை போகாவிட்டாலும் கூட, ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்’ என்ற பெயரை பெற்றுள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் ஒரு நாள் மற்றும் டி20 என நிர்ணயிக்கப்பட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் பேட்ஸ்வுமன் ஆவார்.
இதேபோல் விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான சர்தார் சிங்கின் பெயரை, ஹாக்கி இந்தியா (எச்ஐ) பரிந்துரை செய்துள்ளது. மற்ற ஹாக்கி வீரர்களான எஸ்.வி.சுனில், தரம்வீர் சிங் ஆகியோர் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.