மக்களுக்கான வளர்ச்சி என்பதை மறந்து விட்டு மத்திய, மாநில பாஜ அரசுகள் வகுப்புவாதத்தை தூண்டுகின்றன : அகிலேஷ் குற்றச்சாட்டு
5/2/2025 5:10:13 PM
லக்னோ: மத்திய, மாநில பாஜ அரசுகள் வளர்ச்சியை மறந்து விட்டு மக்கள் மத்தியில் வகுப்புவாத பிரச்னைகளை தூண்டி வருகின்றன என முன்னாள் முதல்வர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி அரசை வீழ்த்தி விட்டு பாஜ வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் முதல்வரானார். அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக மாநில அரசை விமர்சித்து அகிலேஷ் பேசினார்.
நேற்று லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகிலேஷ் பேசுகையில், மக்களின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மறந்து விட்டு மத்திய, மாநில அரசுகள் வகுப்புவாத பிரச்னைகளை மக்கள் மத்தியில் கிளறி வருகின்றன. ஆர்எஸ்எஸ்,பாஜ அடிப்படை கொள்கையே வகுப்புவாதம்தான். நாட்டையும், ஜனநாயகத்தையும் எந்த திசையில் அவர்கள் இட்டு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ பாஜ அரசு ஒன்றும் செய்யப் போவதில்லை. அவர்கள் கார்ப்பரேட்டுகளுடன் நட்பு கொண்டவர்கள்.
ஆர்எஸ்எஸ், பாஜவை பொறுத்த வரையில் பண பலத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது ஒன்று மட்டும்தான் நோக்கம். ஆனால் மக்களை ஏமாற்றிக் கொண்டு நீண்ட காலத்திற்கு அரசியல் செய்ய முடியாது. சமாஜ்வாடி அரசில் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் நல திட்டங்களையும் யோகி அரசு புறக்கணித்து வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் மக்களை தவறான திசையில் பாஜ வழிநடத்துகிறது. சட்டத்தின் ஆட்சி என்பது துளியும் கிடையாது. முழுக்க முழுக்க அராஜக ஆட்சிதான் அனைத்து மட்டத்திலும் நிலவுகிறது என்று அகிலேஷ் குற்றம் சாட்டினார்.