ஆம் ஆத்மியில் பிளவு; உட்கட்சி விவகாரம் குறித்து வெளியில் பேசக் கூடாது நிர்வாகிகளுக்கு சிசோடியா எச்சரிக்கை
5/2/2025 5:08:55 PM
புதுடெல்லி: ஆம் ஆத்மி அரசியல் விவகார கமிட்டியில் இருந்து எம்எல்ஏ விலகியதால் கட்சிக்குள் பிளவு மேலும் வலுத்து வருகிறது. இதையடுத்து கட்சி விவகாரத்தை வெளியில் பேசக் கூடாது என சிசோடியா எச்சரிக்கை விடுத்துள்ளார். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள், டெல்லி இடை தேர்தல், மாநகராட்சி தேர்தல் என ஆம் ஆத்மி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. தோல்விக்கு ஓட்டு இயந்திரத்தில் பாஜ செய்த தில்லுமுல்லு வேலைகள்தான் காரணம் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இந்த சூழலில் அது மட்டுமே காரணமல்ல என ஆம் ஆத்மியின் மற்றொரு தலைவர் குமார் விஸ்வாஸ் குற்றம் சாட்டினார்.
மேலும் 30 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற குமார் விஸ்வாஸ் முயற்சிப்தாக செய்திகள் வெளியாகின. அதே நேரத்தில் பாஜ, ஆர்எஸ்எஸ்சுடன் இணைந்து குமார் விஸ்வாஸ் கட்சிக்குள் பிளவை உருவாக்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கைது செய்யப்படும் வேளையில், அஜித் தோவால், டெல்லி கமிஷனர் பாஸி ஆகியோருடன் குமார் விஸ்வாஸ் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்றார். இந்த சூழலில் நேற்று ஆம் ஆத்மி அரசியல் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமானத்துல்லா கான் வெளிப்படையாகவே குமார் விஸ்வாஸ் மீது குற்றம் சாட்டினார்.
இதையடுத்து ஆம் ஆத்மி அரசியல் விவகார குழுவில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்தார். அமானத்துல்லாகான் ராஜினாமாவை தொடர்ந்து தலைவர்கள் யாரும் ஆம் ஆத்மி கட்சி விவகாரம் குறித்து ஊடகங்களில் மற்றும் வெளியில் பேச வேண்டாம் என துணை முதல்வர் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நமது ஆட்சி காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அவற்றில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. அரசியல் தலைவர்களின் இது போன்ற சின்னத்தனமான அறிக்கைகளால் ஆட்சியில் செயல்பாடுகள் பாதிக்கப்படக் கூடாது என்று தெரிவித்தார்.