பயிர் காப்பீடு தொகை கோரி காலில் விழுந்த விவசாயியை திட்டிய அமைச்சர் மணியன்
5/2/2025 3:12:18 PM
வேதாரண்யம்: பயிர் காப்பீடு தொகை கோரி, காலில் விழுந்த விவசாயியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.குடிசை மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 400 பேருக்கு நேற்று, ஆணை வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார்.விழா அரங்கிற்கு வெளியே பயிர் காப்பீட்டுத் தொகை பெற்றுத் தர கோரி மனு அளிக்க ஒரு மணி நேரமாக விவசாயிகள் ரோட்டில் காத்திருந்தனர். போலீசார் விழா அரங்குக்குள் விவசாயிகளை அனுமதிக்கவில்லை. கடும் ேபாலீஸ் பாதுகாப்போடு விழா நடந்தது.
விழா முடிந்ததும் அமைச்சர் காரில் ஏற வந்தார்.அப்போது சுப்பிரமணியன் என்ற விவசாயி, அமைச்சரின் காலில் விழுந்து ‘2015ம் ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் தொகை இன்னும் கிடைக்கவில்லை. இதை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவுடன் முறையிட்டார். ‘இதைச் சொல்ல வேண்டியதுதானே, ஏன் காலில் விழுகிறாய், நடிக்கிறாயா?’ என்று அமைச்சர் கோபமாக கேட்டார். ‘காலில் விழுந்தவனை திட்டுறீங்களே.. இது நியாயமா?’ என விவசாயி திருப்பி கேட்க, அமைச்சருக்கும், விவசாயிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அமைச்சர், விவசாயியிடம், ‘இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு காப்பீட்டு தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்தி விட்டன. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சாட்டிலைட் மூலம் எடுத்த கணக்கிற்கும், நாம் அளித்த கணக்கிற்கும் ஒத்து வரவில்லை. குறிப்பிடும் இடங்களில் சாகுபடியே செய்யவில்லை என்று காப்பீட்டு நிறுவனம் கூறுகிறது. இதனால் இழுபறி நீடிக்கிறது. இதுகுறித்து மத்திய அரசுடனும், காப்பீட்டு நிறுவனத்துடனும் பேசி வருகிறோம்’ என்று நீண்ட விளக்கம் அளித்துவிட்டு காரில் ஏறி சென்றார்.