ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 21ம் நாளாக போராட்டம் நீடிப்பு
5/2/2025 3:09:18 PM
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக பெண்கள் மற்றும் இளைஞர்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி துவக்கினர். நேற்று நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதி விவசாயிகள் மரத்தில் ஏறி தலைகீழாக தொங்கி நூதன போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.இந்நிலையில் நெடுவாசலில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜா தலைமை வகித்தார். இதில் நெடுவாசல் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வணிக ரீதியாக மரபுசார்ந்த, மரபுசாராத எரிசக்தி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் மற்றும் கனிமபொருட்கள் எடுக்கும் பணிகளை மேற்கொள்ளவும், தொடங்கவும் அனுமதிப்பது இல்லை.
விவசாய தன்னிறைவு நிறைந்த நெடுவாசல் சுற்றுவட்டார பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். கிராம மக்களின் வாழ்வாதாரத்தையோ, கிராமத்தின் சுற்றுச்சூழலையோ பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும், மத்திய, மாநில அரசுகள் கிராமத்திற்குள் கொண்டு வருவதற்கு முன்பு கிராம சபையின் ஒப்புதலைப்பெற வேண்டும்.எண்ணெய் நிறுவனங்களால் பெறப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து இன்று 21வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் கிராம மக்கள், சிறுவர், சிறுமிகள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.