வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் பாகிஸ்தானுக்கு பதிலடி தர ராணுவத்திற்கு முழு அதிகாரம்
5/2/2025 2:51:00 PM
ஸ்ரீநகர்: எல்லையில் போர் பதற்றம் அதிகரிப்பு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தினருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. காஷ்மீரில், பாக்., ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த பரம்ஜித்சிங், பிரேம் சாகர் ஆகியோர் பலியாகினர். இந்த வீரர்களின் உடல்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிதைத்தனர். மேலும் வீரர்களின் தலையை துண்டித்ததால் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா வந்து சென்ற 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து காஷ்மீர் விரைந்துள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ரவாத், நகர் சென்று ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து கவர்னர் வோரா இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த வெறித்தனமான நடத்தைக்கு அரசியல் வேறுபாடுகள் இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என குற்றம் சாட்டியுள்ளன. அதே நேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி மத்திய அரசு தீர்வு காண முன்வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், காஷ்மீரில் மட்டும் பாகிஸ்தானின் அத்துமீறல் காரணமாக 200க்கும் அதிகமான வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். 91 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1343 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தனைக்கு பிறகும் மத்திய பாஜ அரசு தூக்கம் கலையாமல் உள்ளது. பாஜ தலைமையிலான மத்திய அரசின் இந்த செயல்பாடு பாகிஸ்தான் விவகாரத்தில் கொள்கை ரீதியாக பின்தங்கியுள்ளதையே காட்டுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் இது போன்ற நடவடிக்கைக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அரசின் பொறுப்பில் உள்ள பாஜ தலைவர்களுக்கும் உள்ளது. பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து பாதுகாப்பு துறையை கையில் வைத்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விரைந்து செயல்பட வேண்டும். காஷ்மீரில் நடைபெறும் பிரச்னைகளுக்கு மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவை மத்திய அரசுக்கு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவ வீரர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு பதிலடியாக நேற்று இரவே இந்திய ராணுவ தரப்பில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய கிருஷ்ண கட்டி பகுதியில் 2 பாகிஸ்தானின் பதுங்கு குழிகளையும் இந்திய ராணுவம் அழித்தது.
இந்திய ராணுவ வீரர்கள் உடலை தாங்கள் சிதைக்கவில்லை என பாகிஸ்தான் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி நபீஸ் சகாரியா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியில், எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தவில்லை. இந்திய வீரர்களின் உடல்களை சிதைத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானதாகும் என்று அதில் மறுத்துள்ளார். இதனிடையே, பாதுகாப்புதுறை அமைச்சர் அருண் ெஜட்லி, பிரதமர் மோடியை சந்தித்து எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினார்.
பாக். தூதர் நழுவல்: எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் உடல் சிதைக்கப்பட்ட விவகாரம் குறித்து டெல்லியில் இன்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நிருபர்கள் சந்தித்து கேள்வி எழுப்பினர். ஆனால் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பாசித் அங்கிருந்து விரைந்து காரில் ஏறி நழுவிச் சென்றார்.